புதன், 22 மார்ச், 2017

கேரளாந்தகன் திருவாயில் தொடர்ச்சி ....


நம் தஞ்சை கோவில் மொத்தம் ஆறு திருவாயில்களைக் கொண்டது

1. கேரளாந்தகன் திருவாயில்
2. இராஜராஜன் திருவாயில் 
3. அணுக்கன் திருவாயில் 
4. மேற்கு வாயில்
5. தெற்கு வாயில் 
6. தெற்கு வாயில் 



இவற்றில் இன்று நம் காணப் போவது கேரளாந்தகன் திருவாயில் தொடர்ச்சியே

கேரளாந்தகன் திருவாயில்
கி .பி . ஆயிரமாவது ஆண்டில் தமிழகத்தில் இருந்த கோபுரங்களில் மிக பெரிய கோபுரமாக திகழ்ந்தது தஞ்சை பெருங்கோவிலின் கிழக்கு கோபுரமான கேரளாந்தகன் திருவாயில் ஆகும் .

பிற்காலத்தில் ஏழுநிலை முதல் பதின் மூன்றுநிலைக் கோபுரங்கள் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்தது இக்கோபுரமே.

97'2" நீளம்,55'9" அகலம் .11௦ ' உயரத்துடன் இக்கோபுரம் அமைந்துள்ளது .
இக்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது .
 1.உபபீடம் 
2.அதிஷ்டானம் 
3 .வேதிகை 
4.பித்தி 
5 .பிரஸ்தரம்  
என்னம்மா இது புரியாத மொழி போல இருக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றலாம் ...
விளக்கம் இதோ 


1.உபபீடம்
அதிஷ்டானம் என்னும் பீடத்திற்கு வலுவூட்டும் அடித்தளமாய் அமைந்த உறுப்பே உபபீடம் ஆகும் .
கடைக்கால்(உபானம் )  மீது பூமி மட்டத்திற்கு மேலாக அமைந்திருக்கும் முதல் கட்டிட அமைப்பு ஆகும் .

2.அதிஷ்டானம் (பீடம் )
ஒரு கோபுரத்தின் அடித்தளமே அதிஷ்டானம் ஆகும் .அதற்க்கு வலுவூட்டுவதற்கும் ,அழகுபடுத்துவதற்கும் உதவுவது தான் உபபீடம் ஆகும் .

3.வேதிகை  
வேதிகை என்பது அதிஷ்டானம் மேல் அமைந்துள்ள திண்ணை போன்ற அமைப்பு மற்றும் காலுள்ள பீடங்கள் இவையே வேதிகை எனப்படும் .

4.பித்தி (பாதசுவர் )
 அதிஷ்டானத்திற்கு மேலாக உத்திரத்திற்க்கு கீழ்வரை உள்ள பகுதி பித்தி ஆகும் .
இந்த பித்தியை வெறும் சுவராக அல்லாமல் கலைநயத்துடன் வடிவமைப்பர்,எனவே இப்பாதச்சுவரை அரைத்தூண்கள்,தோரணங்கள் ,கோஷ்டங்கள் போன்ற அலங்காரத்துடன் அமைப்பர் .

5.பிரஸ்தரம்   
அதிஷ்டானம்,பாதசுவர் ஆகியவற்றை முடும் வகையில் அமைவதே பிரஸ்தரம் ஆகும் .

(இந்த நிலைகள் பற்றிய விரிவான விளக்கத்தை மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன் . அதில் ஒவ்வொன்றின் அளவுகள் ,வகைகள் ,கால மாற்றங்கள் அனைத்தையும் காண்போம் )

மீண்டும் கேரளாந்தகன் திருவாயிலில் நுழையலாம் 
பித்தியில் நான்கு அரைச் செதுக்குருத் தூண்களும் ,பக்கத்திற்கு இரண்டாக எட்டுக் கோஷ்டங்களும் தெய்வ உருவமின்றி காணப்படுகிறது .

உபானத்திலிருந்து இரண்டாம் தளத்தின் பாதி சுவர் வரை கல்லாலும் ,அதற்கு மேலாக செங்கற் கட்டுமானத்தளும் அமைந்துள்ளது .

இரண்டாம் தளத்திற்கு மேலாக ஒவ்வொரு தளத்திலும் பயன்படுத்தப்பட்ட மரங்கள் அகற்றப்பட்டதால் ஒவ்வொரு தளமும் சிதைந்தே காணப்படுகிறது .

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் மேல்தளத்தில் இரண்டு சிறு ஆலயங்கள் உள்ளன .அவற்றில் சிறிய தோரண வாயில்கள் உள்ளன .பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி திருமேனிகள் நித்ய வழிபாட்டில் அபிடேயத்திற்கு உட்பட்டது என்பதால் அபிடேக நீர் வெளியேறும் அமைப்புகளும் உள்ளது .

இப்பதிவின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம் .மீண்டும் ஒருமுறை தஞ்சையின் அழகையும் ,அதிசயத்தும் காண்போம் .